டமஸ்கஸ்: பூகம்பத்தினால் சிரியாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி – சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டரில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. பூகம்பத்துக்கு இதுவரை 24,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதில், போரினால் பாதிக்கப்பட்டு மெல்ல மீண்டு வந்திருந்த சிரிய மக்கள் பலரும் மீண்டும் வீடற்றவர்களாக மாறியுள்ளனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “உள்நாட்டுப் போரில் அகதிகளாக உள்நாட்டிலே அலைந்து கொண்டிருந்த சிரிய மக்களுக்கு இந்த பூகம்பம் மேலும் துயரை அதிகரித்துள்ளது. சிரியாவை பொறுத்தவரை, இது ஒரு நெருக்கடிக்குள் நெருக்கடி. போர், கரோனா, பொருளாதார சரிவினால் சிரியா பாதிக்கப்பட்டிருந்தது. இந்த கடினமான சூழலில் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 50 லட்சம் பேர் வரை வீடுகளை இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐ.நா.செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறும்போது, “12 ஆண்டுகளாக போரை எதிர்கொண்டிருக்கும் நாட்டு மக்கள் தற்போது பூகம்பத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். பூகம்பத்திற்கு முன்னரே 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அடிப்படை உதவிகள் இல்லாமல் இருந்தன. இந்த நிலையில், இந்த பூகம்பம் இந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. சிரியாவில் பூகம்பத்தினால் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல உள்கட்டமைப்புகள் அழிந்துள்ளன” என்றார்.