கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, தக்காளி விலை கிலோ ரூ.110-ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.130 வரை விற்கப்படுகிறது. அதேசமயம், கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் திருவல்லிக்கேணி டியூசிஸ் போன்ற பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.85-க்கு விற்கப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் இதர காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.40-க்கு மேல் விற்கப்படுகின்றன. குறிப்பாக, முருங்கை ரூ.90, புடலங்காய் ரூ.70, பாகற்காய், கத்தரிக்காய், சுரைக்காய் தலா ரூ.60, பீன்ஸ், நூக்கல், அவரைக்காய், சாம்பார் வெங்காயம் ரூ.50, கேரட், பீட்ரூட், வெங்காயம் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.20 என விற்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு சந்தை மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, “தொடர் மழை காரணமாக செடிகளில் காய் பிடிப்பது குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. பருவ மழை முடிந்த பிறகே காய்கறிகள் வரத்து அதிகரித்து, அவற்றின் விலை குறையும்” என்றார்.