நாடு முழுவதும் உள்ள 25,000 தொலைதூர கிராமங்களில் நெட்வொர்க் இணைப்பு வழங்க ரூ.26,316 கோடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்தியாவில் நெட்வொர்க் இணைப்பு இல்லாத சுமார் 24,680 கிராமங்கள் இருப்பதாகக் கணக்கெடுப்பு ஒன்றின் அடிப்படையில் இந்த நிதி முதலீட்டு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்போம் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதிக்கு இணங்க, இன்று மற்றொரு பெரிய முடிவை எடுத்துள்ளோம். டிஜிட்டல் இந்தியா மற்றும் டெலிகாம் உட்பட மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணியும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், ரூ.26,316 கோடி முதலீடு செய்ய முடிவெடுக்கக் காரணமான கணக்கெடுப்பு பற்றியும் குறிப்பிட்டார். கடந்த 7 முதல் 8 மாதங்களில் Gatishkati scheme framework, சேட்டிலைட் இமேஜிங் மற்றும் டெலிகாம் சர்விஸ் ப்ரொவைடர்களின் டேட்டாக்களை பயன்படுத்தி, மத்திய அரசு விரிவான கணக்கெடுப்பை எடுத்துள்ளது. இதன்படி நாட்டில் கிட்டத்தட்ட 25,000 கிராமங்கள் இன்னும் நெட்வொர்க் இணைப்பு பெற்றிருக்கவில்லை என்று இந்த கணக்கெடுப்பு காட்டுகிறது. எனவே இந்த கிராமங்களில் நெட்வொர்க் இணைப்பை வழங்க மொத்தம் ரூ.26,316 கோடி நிதி முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
இந்த முதலீட்டு பேக்கேஜ் Saturation Coverage எனப்படும் என்ற அவர், இந்த பேக்கேஜ் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும். இது சப் கா சாத், சப் கா விகாஸ் (Sab ka saath, Sab ka vikas) கொள்கையின் அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இருக்கும் என்றார். புணர்வாழ்வு, புதிய செட்டில்மென்ட்ஸ், ஏற்கனவே உள்ள ஆபரேட்டர்கள் மூலம் சேவைகளைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றின் காரணமாக 20% கூடுதல் கிராமங்களைச் சேர்க்க இந்தத் திட்டத்தில் ஏற்பாடு உள்ளது.