புதுடெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் நாட்களில் போரட்டத்துக்கு அவர்கள் அனுமதி கேட்டால், ஜந்தர் மந்தர் தவிர வேறு இடத்தில் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 23-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் இப்போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்தனர். மல்யுத்த வீரர்களின் இந்தப் போராட்டத்தில் விவசாயிகளும் இணைந்து போராடி வருகின்றனர்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட இருந்த நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அவர்களை டெல்லி போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி அவர்கள் செல்ல முயன்றதால், போலீஸாருக்கும், வீரர், வீராங்கனைகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை பேருந்தில் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.
புதிய நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்பு நடத்த முற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீசார் “பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்சி மாலிக் மற்றும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் ஜந்தர் மந்தருக்கு போராட்டம் நடத்த மீண்டும் வந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்” என்று தெரிவித்திருந்தனர்.
இனிவரும் நாட்களில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரினால், அவர்களுக்கு ஜந்தர் மந்தர் தவிர வேறு பொருத்தமான இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக், “அனைத்தும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. ஒரு மல்யுத்த வீராங்கனையை 20 – 30 காவலர்கள் தடுத்து நிறுத்தும் போது நாங்கள் எப்படி வன்முறையில் ஈடுபட்டிருக்க முடியும். நாங்கள் அவர்களிடம் எங்களை அப்புறப்படுத்தாதீர்கள் என்று சொல்ல முயன்றோம். எங்களின் கோரிக்கைகளை யாரும் கேட்காததால் நாங்கள் அமைதியான முறையில் பேரணி செல்ல முயன்றோம்.
ஆனால், அவர்கள் எங்களை வலுக்கட்டாயமாக பேருந்துக்குள் தள்ளினர். அதனால் எங்கள் உடல்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டன. நாங்கள் எந்தக் கலவரத்திலும் ஈடுபடவில்லை, எந்தப் பொதுச் சொத்தையும் சேதப்படுத்தவில்லை, எந்தத் தடுப்புகளையும் தள்ளவில்லை. முதல் நாளில் இருந்தே நாங்கள் அமைதியான முறையில்தான் போராடி வருகிறோம். எங்களைப் போக அனுமதிக்குமாறு நாங்கள் காவலர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், எங்களை அனுமதிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து டெல்லி போலீசார் ஜந்தர் மந்தரில் ஒரு மாதகாலத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்த இடத்திலிருந்து அனைத்துப் பொருள்களையும் அப்புறப்படுத்தினர். மேலும், டெல்லி முழுவதும் 700 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மூன்று மல்யுத்த வீராங்கனைகள் உட்பட 109 பேர் ஜந்தர் மந்தரில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட பெண்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்திருந்தனர்.