முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு நேற்று முன்தினம் முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை வரைவு அறிக்கை தொடர்பாக எனது கடுமைான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். முதுநிலை மருத்துவப் படிப்பில் சொந்தமாநில ஒதுக்கீட்டில் மாநிலங்களின் செயல்பாட்டை நீக்கும் நோக்கில் இந்த வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு முதுநிலை மருத்துவ இடங்களை மாநில அரசுகளே பெரும் முதலீட்டில் உருவாக்கியுள்ளன. எனவேதான், மாநில அரசின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
முதுநிலை மருத்துவ இடங்களுக்கான சேர்க்கை என்பது இடஒதுக்கீடு அடிப்படையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.
ஆனால், மத்திய அரசின் இந்த வரைவு அறிக்கையால் மாநில அரசின் நடவடிக் கைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த வரைவு அறிக்கையை அவசரமாக கொண்டுவருவதை கைவிட வேண்டும். முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.