அதிகாரத்தைப் பகிர்ந்து தர திமுக எம்எல்ஏ, அரசு விழாவில் ஆளுநர் தமிழிசைக்குக் கோரிக்கை வைக்க, அதற்கு முதல்வர் ரங்கசாமியும், ஆளுநர் தமிழிசையும் பதில் தந்தனர்.
புதுச்சேரியில் 75-வது சுதந்திர தினத் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் ’ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்னும் 75,000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா பாகூர் கொம்யூனில் உள்ள மணப்பட்டு கிராமத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
அப்போது அத்தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் பேசுகையில், மக்களால் தேர்வான அரசுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று ஆளுநருக்குக் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “மக்கள் பணிகளுக்கு ஆளுநர் முழு ஒத்துழைப்பை நிச்சயமாகத் தருவார் என்ற நம்பிக்கையுள்ளது. அதிகாரத்தைப் பகிர்ந்து தரவேண்டும் என்று எம்எல்ஏ பேசியுள்ளார். அது ஆளுநருக்குத் தெரியும். அதிகாரப் போட்டி கடந்த ஆட்சியில் வெட்டவெளிச்சமாகி இருந்தது. மக்களுக்குப் பணியாற்ற நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு என்னென்ன அதிகாரம் தேவை என்பதை ஆளுநர் நன்கு அறிவார். நல்லது செய்யத் தடையில்லை என்று ஆளுநர் கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை இறுதியில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் தந்து பேசுகையில், “அதிகாரத்தைக் கையில் என்றும் நான் எடுத்ததில்லை. முதல்வருக்கும், எனக்கும் இருக்கை சமமான இருக்கைதான். இதை இவ்விழாவிலேயே பார்க்கலாம். அன்புப் பகிர்வுதான் உள்ளது. அதிகாரப் பகிர்வு இல்லை. அரசு மக்களுக்கு நல்லதைச் செய்து கருத்து முன்வைத்தாலும், ஆளுநராக இல்லாமல், புதுச்சேரி சகோதரியாக துணை நிற்பேன். அதனால்தான் துணைநிலை ஆளுநர்” என்று குறிப்பிட்டார்.