புளியந்தோப்பில் தொட்டாச்சிணுங்கி போல தொட்டால் விழும் கட்டிடத்தை அதிமுக அரசு கட்டியுள்ளதாக, திமுக எம்எல்ஏ பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து, அங்கு சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இக்கட்டிடத்தின் தரத்தை சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சிறப்புக்குழுவின் ஆய்வறிக்கையை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஆக. 19) சட்டப்பேரவை கூடியதும், எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன், புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிட விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், “தொட்டாச்சிணுங்கி போல தொட்டால் விழும் கட்டிடத்தை அதிமுக அரசு கட்டியுள்ளது. இந்த கட்டிடம் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த கட்டிடம் கட்டி முடித்த பின் இதற்கு சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கட்டிடம் தொடர்பான அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கால ஆட்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பேசினார்.