பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பேருந்து சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழைநீர் சூழ்ந்துள்ள மந்தைவெளி பணிமனை, தி.நகர் பணிமனை, பேருந்து நிலையம் மற்றும் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேலு, ஜெ.கருணாநிதி, மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 31 பணிமனைகள் சென்னையில் அமைந்துள்ளன. இதில் மந்தைவெளி மற்றும் தி.நகர் ஆகிய இரண்டு பணிமனைகளில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளதாக தெரியவந்தது.

இதையடுத்து, இந்த பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டேன். மந்தைவெளி பணிமனையில் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. தி.நகர் பேருந்து நிலையத்தில் மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.

17,576 பேருந்துகள்

இந்த மழைக் காலத்திலும் தமிழ்நாடு முழுவதும் 17,576 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி பேருந்துகளின் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.