சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே ஆற்று கால்வாய் தண்ணீருக்குள் காருடன் விழுந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் காப்பாற்றிய ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வைகை ஆற்றில் இருந்து மாரநாடு கண்மாய்க்கு மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையை ஒட்டி கால்வாய் செல்கிறது. தற்போது இக்கால் வாயில் ஆற்றுநீர் செல்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மானாமதுரை பகுதியைச் சேர்ந்த கணவர், மனைவி, 2 குழந்தைகள், ஒரு முதியவர் என 5 பேர் காரில் மதுரையில் இருந்து ஊருக்கு சென்றனர்.

திருப்புவனம் அடுத்த இந்திரா நகர் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் மாரநாடு கால்வாய்க்குள் விழுந்தது. கால்வாயில் 6 அடி ஆழம் இருந்ததாலும், தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருந்ததாலும் அவர்கள் காரிலேயே சுமார் ஒரு மணி நேரமாக தவித்தனர்.

அந்த சமயத்தில் அவ்வழியாக திருப்புவனம் வடகரையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் (29) காரில் ராமநாதபுரம் சென்றார். கால்வாயில் கார் கவிழ்ந்து கிடந்ததை பார்த்து, முத்துக்கிருஷ்ணன் இறங்கி பார்த்தபோது, காருக்குள் 5 பேர் சிக்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து முத்துக் கிருஷ்ணன் துணிச்சலாக கால்வாயில் நீந்தி சென்று காரில் தவித்த 5 பேரையும் காப்பாற் றினார். முத்துக்கிருஷ்ணனின் இச் செயலை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதையடுத்து முத்துக்கிருஷ்ணனுக்கு பாராட்டு கள் குவிந்து வருகின்றன.