நேற்று பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர்கள் சங்கமான மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷனின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர்கள் சங்கமான, மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷனின் (MAA) புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. பிரகாஷ்ராஜ் தலைமையில் ஒரு அணியும், விஷ்ணு மஞ்சு தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன.

பிரகாஷ்ராஜ் அடிப்படையில் ஒரு கன்னடர், அவர் எப்படி தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என்று பிராந்திய மனப்பான்மையுடன் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இது சர்ச்சையானது. பிரகாஷ்ராஜுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சொற்களால் அடித்துக் கொண்டனர். இது சாம்பிள். இதேபோல் நிறைய சொற்போர்கள் நடந்தன. 

ஞாயிறு நடந்த தேர்தலில் விஷ்ணு மஞ்சு பிரகாஷ்ராஜைவிட 100 க்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். விஷ்ணு மஞ்சு அணியைச் சேர்ந்தவர்கள் செயலாளர், பொருளாளர், ஒரு துணைச் செயலாளர், ஒரு இணை செயலாளர் மற்றும் ஒரு செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவியையும் கைப்பற்றினர். பிரகாஷ்ராஜ் அணி ஆறு செயற்குழு உறுப்பினர், ஒரு துணைச் செயலாளர், ஒரு இணைச் செயலாளர் ஆகிய பதவிகளை கைப்பற்றியது. 

பிரகாஷ்ராஜின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் நாக பாபு ஞாயிறு இரவு தனது நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். சங்கத்தின் பிராந்திய மனப்பான்மை, குறுகிய மனம் படைத்தவர்களின் ஆதிக்கம் இவற்றால் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார். 

நேற்று பிரகாஷ்ராஜும் தெலுங்கு நடிகர்கள் சங்கமான மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷனின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரும் நாக பாபு கூறிய அதே காரணங்களையே தனது ராஜினாமாவுக்கும் கூறியுள்ளார். அதேநேரம் ஒரு நடிகனாக தெலுங்கு சினிமாவில் தனது பங்களிப்பு தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.