சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டுமே. அது நான் இல்லை என்று அஸ்வின் குமார் விளக்கமளித்துள்ளார்.
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். இதில் பேசிய அஸ்வின், “நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்” என்று கூறியிருந்தார்.
அஸ்வினின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையானது. கடந்த 2 நாட்களாக மீம்ஸ், வீடியோ மூலமாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (08.12.21) தனியார் ஊடகம் ஒன்றுக்கு அஸ்வின் அளித்துள்ள பேட்டியில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”அது நான் கலந்துகொண்ட முதல் பெரிய நிகழ்வு என்பதால் நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். நான் என்ன பேசவேண்டும் என்று தயார் செய்துகொண்டும் செல்லவில்லை. ரசிகர்கள் அங்கு என் மீது பொழிந்த அன்பில் என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை. என்னிடம் கதை சொன்ன எந்தவொரு இயக்குநரையும் அவமதிக்க வேண்டும் என்கிற நோக்கம் எனக்கில்லை. நான் பேசியது இந்த அளவு மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. அதற்குப் பின்னாலிருக்கும் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும், அதில் எந்த நோக்கமும் இல்லை.
நான் கதைகளின் எண்ணிக்கையைச் சற்று மிகைப்படுத்திச் சொல்லிவிட்டேன். நான் இதற்கு முன்பு 40 கதைகளைக் கேட்டதில்லை. நண்பர்களிடம் பேசும்போது ஏதோவொரு எண்ணைச் சொல்வோம். ஆனால், அதுபோன்ற ஒரு சுதந்திரத்தை நான் மேடையில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.
நான் குறிவைக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்தப் பிரச்சினை தவறான நோக்கில் பூதாகரமாக்கப் படுகிறது. நான் சிலரது படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் என் மீது வன்மத்தைக் கக்கி வருகின்றனர். அது மரியாதைக் குறைவு அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இயக்குநர் ஹரிஹரன் கூட அவரது பேச்சைத் தயார் செய்யவில்லை. நாங்கள் நண்பர்கள் குழுவில் பேசிக் கொள்வதைப் போலப் பேசினோம். சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டுமே. அவர் யார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது நான் இல்லை”.
இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.