சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திலும், ஓ.பன்னீர்செல்வம் தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திலும் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தனர்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா இன்று. இதனையொட்டி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றினார். மேலும், அங்குள்ள கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவினை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
சட்டப்பேரவை புறக்கணிப்பு: இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாள் கூட்டத்தை இபிஎஸ் ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்காமல், கட்சியின் தொடக்கவிழா நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இதேபோல், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.