அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட அதிமுகவினர், திமுகவைக் கண்டித்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவுக்கு வந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர், அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி ஊழல்களில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் சமீபத்தில் புகார் அளித்தார். தவிர, அதிமுக ஆட்சியில் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்துவிட்டதாக, கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மாநகர போலீஸில் நேற்று (ஆக. 09) புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில், கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட கோவையில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று (ஆக. 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையைத் தொடர்ந்து, கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் வந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் அருண்குமார், அம்மன் அர்ஜூனன், தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கந்தசாமி, ஜெயராம், அமுல்கந்தசாமி ஆகியோர் இன்று காலை முதல் வந்து காத்திருப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு இருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திமுக அரசைக் கண்டித்தும், காவல்துறையைக் கண்டித்தும், பொய் வழக்குப் போடுவதாகவும் கோஷம் எழுப்பினர். அவரது வீட்டின் முன்பு கூட்டத்தைக் கட்டுப்படுத்த டிவைடர் தடுப்பை போலீஸார் வைக்க முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் டிவைடரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி இவ்வாறு சட்டவிரோதமாக ஒன்றுகூடி இருப்பது தவறு, காத்திருப்பைக் கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என, அதிமுகவினரிடம் மாநகர போலீஸார் வலியுறுத்தினர்.
ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து, சோதனை முடியும் வரை இங்கு காத்திருப்போம் எனத் தெரிவித்து, கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.