சினிமாவின் எதிர்காலமே இனி ஓடிடிதானா என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார்.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் நவம்பர் 2-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தை விளம்பரப்படுத்த இணையம் வழியே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சூர்யா. அப்போது “கரோனா ஊரடங்கிற்குப் பின் உங்களுடைய படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. சினிமாவின் எதிர்காலமே இனி ஓடிடிதான் என முடிவு செய்துவிட்டீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா கூறியிருப்பதாவது:

“நிச்சயமாகக் கிடையாது. இப்போது இருக்கும் நிலைமை, அடையாளம், சரவணனிலிருந்து சூர்யாவாக மாறியது என அனைத்துமே திரையரங்குகளில் படம் பார்த்து ஆசீர்வாதத்தால்தான் இப்படி இருக்கிறேன். இதற்கு மறுபேச்சே கிடையாது.

இரண்டு ஆண்டுகள் மொத்தமாக முடங்கிவிட்டோம். ஒரு படம் செய்தால் அதில் 300 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது நேரடியான வேலை வாய்ப்பு. மறைமுகமாக சுமார் 1000 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நேரத்தில் 5 படங்களைத் தொடங்கினோம். அதன் மூலம் சுமார் 6000 குடும்பங்களுக்குச் சராசரியான வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் நடந்திருக்கும். நல்ல விஷயம் இதன் மூலமாக நடந்திருக்கிறது என்பதைத்தான் பார்க்கிறேன்.

அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள். ‘எதற்கும் துணிந்தவன்’, ‘வாடிவாசல்’ உள்ளிட்ட அனைத்துமே கொண்டாட வேண்டிய படங்கள். ஆனால், ஓடிடி என்பது எப்போதுமே இருக்கப்போகிற ஒரு விஷயம். இப்போது மக்களின் வாழ்க்கை முறையே மாறுகிறது. ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது செயலி மூலமாக ஆர்டர் செய்து வீட்டிலேயே சாப்பிடுகிறோம்.

திரையரங்குகள் மற்றும் ஓடிடி இரண்டுமே இருக்கும். எதற்கும் மரியாதையைக் குறைப்பவன் நானல்ல. மாற்றங்கள் வரும்போது அதற்கு பக்குவப்பட்டுக் கொண்டு போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான். திரையரங்குகளுக்காக வேறு கதைகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிக்கவுள்ள கதைகளுக்கு விவாதம் போய்க் கொண்டிருக்கிறது”.

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

3 COMMENTS

  1. Having an interior designer is incredibly important since they have the knowledge and experience to help transform a space into something functional and aesthetically pleasing. Interior designers know how to balance colour, texture, furniture, and other design elements to create the desired look. They are creative problem solvers and can work their magic in any space from small closets to large outdoor decks. With an expert’s eye for detail, your own ideas can be refined and executed perfectly, elevating your space both functionally and aesthetically. Thank you for providing this content and helping us recognize the importance of hiring an interior designer!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here