கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் நண்பர்களுடன் ட்ரெக்கிங் சென்ற இளைஞர் மலைச்சரிவில் இருந்த சிறிய இடுக்கில் சிக்கிக் கொள்ள இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவரை ராணுவம் மீட்டுள்ளது.
ஆர்.பாபு (23) என்ற இளைஞரும் அவரது இரண்டு நண்பர்களும் திங்கள்கிழமையன்று மலப்புரத்தில் உள்ள செராட் மலைக்கு ட்ரெக்கிங் சென்றனர். மலை உச்சிக்கு அவர்கள் மூவரும் பயணித்தனர். மற்ற இருவரும் இடையிலேயே பின்தங்கிவிட பாபு மட்டும் உச்சிக்குச் சென்றார். ஆனால், அங்கிருந்து அவர் கால் இடரி கீழே விழ பாறைகளின் ஊடே இருந்த ஒரு இடுக்கில் சிக்கிக் கொண்டார். நீண்ட நேரத்துக்குப் பின் உச்சிக்கு வந்த நண்பர்கள் பாபுவைத் தேடினர். பின்னர் பாபுவின் குரல் கீழிருந்து கேட்பதைப் பார்த்து அதிர்ந்தனர். அப்போது தான் பாபு பாறை இடுக்கில் ஆபத்தான நிலையில் மாட்டியிருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறை, பின்னர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் என திங்கள் மாலையில் இருந்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. காலில் காயத்துடன், தண்ணீர், உணவு இல்லாமல் இருந்த இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தார் ஆர்.பாபு.
இந்நிலையில், விஷயம் முதல்வர் வரை செல்ல, முதல்வர் பினராயி விஜயன் மீட்புப் பணியில் ராணுவ உதவியை கோரினார்.
இது குறித்து இன்று காலை 8 மணியளவில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மலப்புரம் செராட் மலையில் சிக்கியுள்ள இளைஞரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அந்த இளைஞருடன் ராணுவத்தினர் பேசியுள்ளனர். இந்திய விமானப்படை ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இன்று மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறும்” என்று பதிவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று காலை ராணுவ மீட்புக்குழு அந்த இடத்திற்குச் சென்றது. அங்கு முதலில் அவருக்கு தண்ணீரும், உணவும் கொடுக்கப்பட்டது.
இன்று அதிகாலை முதலே மீட்புப் பணிகளைத் திட்டமிட்ட ராணுவத்தின் தெற்கு கமாண்ட் வீரர்கள் முதலில் அவரை கடலோர காவற்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்க முயன்றனர். ஆனால் அதில் சில சிக்கல்கள் இருந்ததால் அது சாத்தியப்படவில்லை.
பின்னர் கயிறு உதவியுடன் பாபுவை ராணுவத்தினர் மலை உச்சிக்கு தூக்கினர். உச்சியிலிருந்து 200 அடி கீழே இருந்த பாறை இடுக்கில் தான் பாபு சிக்கியிருந்தார்.
40 மணி நேரத்திற்குப் பின்னர் பாதுகாப்பு கயிறு மூலம் பாபு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தேனி மாவட்டம் குரங்கணியில் ட்ரெக்கிங் சென்றவர்கள் தீ விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டன. அப்போது அதனை ஒட்டி வன ஆர்வலர்கள் பலரும் இதுபோன்று ட்ரெக்கிங் செல்வோருக்கு அறிவுரை வழங்கினர். வனம் என்பது யாரும் சாகசம் செய்வதற்கான இடம் அல்ல. வனத்தை பொறுப்போடு அணுக வேண்டும். ட்ரெக்கிங் செல்லும்போது முறையான பயிற்சியும், அங்கீகாரமும் பெற்றவர்களுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அது இந்த சம்பவத்திற்குப் பின்னரும் நினைவுகூரத்தக்கதாகவே உள்ளது.