பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷன் எதிரொலியாக த்ரிஷா, ஜெயம் ரவியின் ட்விட்டர் ப்ளூ டிக் பறிபோயுள்ளது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் இரண்டாம் பாகம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் அதிக வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் 16-ம் தேதி முதல் இந்தப் படத்தின் புரமோஷன் தொடங்கியது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.

 

 

முன்னதாக, இந்தப் படத்தின் புரமோஷனுக்காக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பெயரை மாற்றியிருந்தார். அதாவது ‘பொன்னியின் செல்வன்’படத்தில் அவரது கதாபாத்திர பெயரான குந்தவை என ட்விட்டரில் மாற்றியிருந்தார். ஜெயம் ரவியும் தனது பெயரை அருண் மொழி வர்மன் என மாற்றியிருந்தார். இதனால் இருவரின் ட்விட்டர் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது. ப்ளூ டிக் நீக்கத்தைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா தனது ஒரிஜினல் பெயரையே மீண்டும் மாற்றியிருக்கிறார். ஆனால், ஜெயம் ரவி இன்னும் அருண்மொழி வர்மனாகவே வலம் வருகிறார்.