பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, கோவையில் காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான 7 காவல் நிலைய எல்லைகளில் மட்டும் 6 காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி) தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதற்கு துணையாக இருந்த 8 அமைப்புகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இன்று (செப்.28) தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து கோவையில் இன்று காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உக்கடம், கோட்டைமேடு மற்றும் சாயிபாபா காலனி, என்.எஸ்.ஆர் சாலை ஆகிய இடங்களில் உள்ள பிஎஃப்ஐ தலைமை அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தன. அந்த அலுவலகங்கள் முன்பு காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

மாநகரப் பகுதியில் காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து 3,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகர காவல் துறையினரால் பதற்றம் நிறைந்த பகுதிகளை உள்ளடக்கியதாக உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், செல்வபுரம், ரத்தினபுரி, கடைவீதி, ஆர்.எஸ்.புரம் என 7 காவல் நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கடைவீதி, ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய எல்லையில் ஒரு எஸ்.பியும், மீதமுள்ள 5 காவல் நிலைய எல்லைகளை மையப்படுத்தி தலா ஒரு எஸ்.பியும் என மொத்தம் 6 எஸ்.பிக்கள் தலைமையில் காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மேற்கண்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 28 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் உக்கடத்தில் உள்ள பேக்கிரி முன்பு இன்று காலை திரண்டனர். பின்னர், அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த காவல் துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கோட்டைமேட்டில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகம் முன்பு வந்தனர். அங்கு பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். சிறிதுநேரத்துக்கு பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.