“இப்போது மீண்டும் சேவைக்கு வந்துள்ளேன். எனது பயணம் தொடரும்…”
தன் மீது வருமான வரித்துறை சாட்டிய குற்றச்சாட்டுக்கு நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறி, கிரவுட் ஃபண்டிங் தளத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.2.1 கோடியை திரட்டியதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இதற்கு தனது ட்விட்டர் வாயிலாக பதிலளித்திருக்கும் சோனு, “என்னுடைய ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்புமிக்க உயிர்களைக் காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறது. நீங்கள் எப்போதும் உங்கள் பக்கத்தை சொல்லவேண்டியதில்லை. நேரம் வரும். நான் எனது முழு இதயத்துடன் இந்திய மக்களுக்கு சேவை செய்ய உறுதியளித்துள்ளேன். நான் ஒரு சில நாட்களாக சில விருந்திருனர்களை சந்தித்தேன். அதனால், தொடர் சேவையில் இருக்க முடியவில்லை. இதோ, இப்போது மீண்டும் சேவைக்கு வந்துள்ளேன். எனது பயணம் தொடரும்” என்று தெரிவித்திருக்கிறார்.
தவிர கடந்த 4 நாட்களாக மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குருகிராம் ஆகிய பகுதிகளில் சோனு சூட்டிற்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது. இதில் நடிகர் மற்றும் அவரது கூட்டாளிகளின் இடத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.