பாஜகவுக்கு இந்த நாட்டுக்கான தியாக வரலாறு கிடையாது. மாறாக, சாவர்க்கர் உள்ளிட்டவர்களின் துரோக வரலாறு இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு பங்கும் வகிக்காமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு வெண்சாமரம் வீசி, ஆதரவாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், பாஜக. பரிவாரங்கள் நீண்டகாலமாக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட அப்பழுக்கற்ற தலைவர்களின் புகழை சிதைக்கிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர்களின் அருங்காட்சியகம் என பாஜக அரசு பெயரை மாற்றியிருக்கிறது.

இந்திய வரலாற்றுச் சுவடுகளை நினைவுபடுத்தும் வகையில் லட்சக்கணக்கான புத்தகங்களும், புகைப்படங்களும், ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் களஞ்சியமாக, கருவூலமாக விளங்குகிற நேரு நினைவு அருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தையும், இளைய சமுதாயத்தினரின் பயன்பாட்டையும் சீரழிக்கிற வகையில் பாஜக அரசு இந்த முடிவை செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று 3259 நாட்கள் சிறைவாசம் புகுந்து விடுதலை பெற்றபிறகு 17 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக இருந்து, நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்ட முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு வாழ்ந்த இல்லம் தான் தீன்மூர்த்தி பவன். 1964 மே 27 அன்று மறையும் வரை 16 ஆண்டுகள் இந்த இல்லத்தில் தான் நேரு வாழ்ந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது 75-வது பிறந்தநாளில் 1966 இல் நவம்பர் 14 அன்று அன்றைய குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நூலகத்தில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி மாணவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் நாள்தோறும் பயன்படுத்துகிற வகையில் மிகமிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அங்கே பல்வேறு நினைவு சொற்பொழிவுகள் நடத்துவதற்கு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இத்தகைய பயன்பாட்டை முடக்குவதற்கும், பண்டித நேருவின் புகழை சீர்குலைப்பதற்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நேருவின் புகழை மழுங்கடித்து விடலாம் என்ற நினைப்புடன் இத்தகைய இழிவான செயலை மோடி அரசு செய்திருக்கிறது.

இத்தகைய இழிவான செயலின் மூலம் நேருவின் புகழை குறைத்துவிடலாம் என்கிற பிரதமர் மோடியின் பெயர் தான் தரம் தாழ்ந்து விட்டது என்பதை எவரும் மறுக்க இயலாது. இந்தியாவையே கட்டமைத்த மாபெரும் தலைவரின் பெயரை மாற்றி கீழ்த்தரமாக செயல்படும் பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

பண்டித நேருவின் பெயரில் உள்ள அருங்காட்சியகத்தையோ, நூலகத்தையோ உங்கள் தலைவர்களின் பெயரில் அமைக்க முடியாது. ஏனெனில் உங்களுக்கு இந்த நாட்டிற்கான தியாக வரலாறு கிடையாது. மாறாக, சாவர்க்கர் உள்ளிட்டவர்களின் துரோக வரலாறு தான் பாஜகவுக்கு இருக்கிறது. அதனால் தியாக வரலாறு படைத்தவர்களின் நினைவுச் சின்னங்களை அழிக்கிற முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. இத்தகைய முயற்சிகளின் மூலம் நவீன இந்தியாவின் சிற்பியாக அழைக்கப்பட்ட பண்டித நேருவின் புகழை ஆயிரம் மோடிகள் வந்தாலும் அழிக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.