நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைப்பான அசோசெம் ஏற்பாடு செய்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபேஸ்-ன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அஜித் தோவல், அ”நாம் நமது வரலாற்றைப் பார்க்கும்போது, சிறந்த தரமான மக்கள், அதிக எண்ணிக்கையிலான படித்தவர்கள் என இந்தியா எல்லாவற்றையும் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு வலுவான பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு கட்டமைக்கப்படவில்லை, அதனால்தான் ஊடுருவல்காரர்கள் – ஹான்ஸ், மங்கோலியர்கள், முகலாயர்கள் ஆகியோர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியைக் கடந்து இங்கு வந்தனர்.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். மகாத்மா காந்திக்கு சவால் விடக்கூடிய துணிச்சல் நேதாஜிக்கு இருந்தது. மரியாதை காரணமாகவே அவர் மகாத்மா காந்தியின் வழியை தடுக்காமல் இருந்தார். எனினும், அதன்பிறகு, நேதாஜி சிறையில் அடைக்கப்பட்டார். நேதாஜி தடுப்புக்காவலில் இருந்தபோது, அவர் இந்தியாவிலிருந்து தப்பிக்க முடிவு செய்தார். ஆப்கானிஸ்தானின் உடையை அணிந்துகொண்டு அவர் காபூலுக்கு புறப்பட்டார். பின்னர் ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் சென்றார். ஜெர்மனியில் அதிபர் அடால்ஃப் ஹிட்லரை சந்தித்து, அந்நாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட 4,000 இந்தியர்களை அவர் விடுதலை செய்தார். அதன்பின் அவர் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய சுதந்திரச் சட்டத்தில் கையெழுத்திட்ட அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கிளெமென்ட் அட்லீ, 1956ல் இந்தியா வந்தார். அப்போது, அவர் கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் தங்கியிருந்ததார். எந்த அழுத்தமும் இல்லாதபோது 1947ல் ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்கு ஏன் ஒப்புக்கொண்டார்கள் என்று அட்லீயிடம் அப்போதைய மேற்கு வங்க ஆளுநர் கேட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மகாத்மா காந்தி 1942ல் கைவிட்டார். ஆங்கிலேயர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படவில்லை. இவற்றை கருத்தில் கொண்டு ஆளுநர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அட்லீ, பிரிட்டிஷ் எடுத்த முடிவுக்குக் காரணம் நேதாஜி என கூறி இருக்கிறார். 1945ம் ஆண்டு தைபேயில் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி இறந்தபோதும், அவர் உருவாக்கிய தேசியவாதத்தின் கருத்துக்களுக்கு ஆங்கிலேயர்கள் பயந்தார்கள். ஏனெனில், நேதாஜியின் பாதையில் பல இந்தியர்கள் சென்றிருப்பார்கள் என்பதால்தான்.

நாட்டுக்கு நேதாஜி அளித்திருக்கும் பாரம்பரியம் இணையற்றது. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது இந்தியா என்று அவர் நம்பினார். அவர் இடதுசாரியா என்பது குறித்து சில சிந்தனைகள் இருக்கின்றன. அவர், இந்தியாவுக்கு வலுவான பொருளாதார கட்டமைப்பு அவசியம் என கருதினார்; அதற்காக திட்டமிட்டார். அவர் தீவிர மத நம்பிக்கை கொண்டவர். பகவத்கீதையை எப்போதும் தன்னுடன் எடுத்துச் செல்லக்கூடியவர். அவர், தனது பார்வையில் மதச்சார்பற்றவராக இருந்தார். ஆனால், உள்ளுக்குள் அவர் பக்தியுடன் இருந்தார். வரலாறு, அவர் விஷயத்தில் இரக்கமற்றதாக இருந்தது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1950 முதல் 62 வரை ராணுவத்தைக் கலைத்துவிடலாம் என்ற யோசனை இருந்தது. நாம் நமது பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தால், 1962ல் நிகழ்ந்த சீன போர் நிகழ்ந்திருக்காது. நேதாஜி உருவாக்க விரும்பிய இந்தியாவை மீண்டும் உயிர்ப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சிகளை மேற்கொள்கிறார். அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.