நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூலை 15 முதல் அடுத்த 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கோவிட் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்களுக்கு மத்திய அரசே இலவசமாக கரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.

இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் இதுவரை 199.12 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,15,068 டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதனைத் தவிர 2 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால்
தனியார் மையங்களில் இத்தகைய பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில் ‘‘இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி வரும் ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’’ என்றார்.