கர்நாடக அணைகளில் இருந்து நேற்று விநாடிக்கு 91 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 53 ஆயிரத்து 351 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 38 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கு விநாடிக்கு 91 ஆயிரத்து 335 கனஅடி நீர் திறந்துவிட‌ப்பட்டுள்ள‌து.

இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர்வரத்து பதிவானது.

நீர்வரத்து நேற்று நிலவரத்தை விட சற்றே குறைந்தபோதும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலவுவதால் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. காவிரிக் கரையோர பகுதிகளை அரசு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.