இயக்குநர் ஹெச்.வினோத் அடுத்ததாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், கமலுடனான அவரது படம் தாமதமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பவாரியா கொள்ளைக் கூட்டத்தைப் பற்றிய இப்படம் மெகா ஹிட்டடித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர், ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ என அடுத்தடுத்து அஜித் படங்களை இயக்கினார். இதையடுத்து கமல்ஹாசனை வைத்து ‘KH233’ படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

 

ஆனால், இப்படம் காலதாமதாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கமல் – ஹெச்.வினோத் படத்தின் முதல் தோற்றம் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், வெளியிடப்படாதது மேற்கண்ட தகவலை உறுதி செய்துள்ளது. அதற்கு பதிலாக கமல் – மணிரத்னம் படத்தின் வீடியோ வெளியானது. இதனால் ஹெச்.வினோத் அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்தியை பொறுத்தவரை அவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘ஜப்பான்’ படம் எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்திலும், ‘96’ இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் ஹெச்.வினோத்துடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க உள்ளார். இதன் படிப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் – கமல் தங்களது படங்களை முடித்த பிறகு இணைவார்கள் என கூறப்படுகிறது.