இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் “சாதிவாரிக் கணக்கெடுப்பு” நடத்தவேண்டும் எனக் கோரி வருகின்றன.

2021 செப்டம்பர் 1 ஆம் தேதி, சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய அரசு காலந்தாழ்த்தாமல் சாதிவாரி கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. ஹரியானா மாநில அரசு மற்றும் பிறர் எதிர் ராஜ்குமார் என்கிற பிட்டு ( The State Of Haryana &others Vs Rajkumar@Bittu – CA 721 of 2021 ) என்ற வழக்கில் 03.08.2021 ஆம் நாளன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரடங்கிய அமர்வு, ‘ஒருவர் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்திருந்தால் அவரை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது’ எனக் கூறியுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சிறைவாசிகள் அனைவரையும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

2. சென்னை உயர் நீதிமன்றம் 2015 ஆகஸ்ட் 12-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அதே ஆண்டு அக்டோபர்- 08ஆம் தேதி பஞ்சமி நிலமீட்பு வழிகளைக் கண்டறிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து அரசாணைப் பிறப்பித்தது. அந்த உயர்நிலைக் குழுவில் நில நிர்வாக ஆணையரின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளரையும் வருவாய்த்துறை செயலாளரையும் உறுப்பினர்களாகக் கொண்டு அந்த உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு 1.86 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. பஞ்சமி நிலம் அனைத்தையும் கண்டறிவதற்கிடையில் இதுவரைக் கண்டறியப்பட்டுள்ள நிலங்களை ஆதிதிராவிட மக்களுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

3. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சாதிகளின் பட்டியலில் பெரும்பாலானவை மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) இடம் பெற்றுள்ளன. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சில சாதிகளும், சீர்மரபினர் பட்டியலில் உள்ள ஒரு சாதியும், ஒன்றிய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை.

சேர்வை, அன்சார், ஆயிரவைசியர், சவுத்ரி, கள்ளர் குல தொண்டமான், கன்னடியநாயுடு, கற்பூர செட்டியார், காசுக்கார செட்டியார், கொங்கு வைஷ்ணவா, குடிகார வெள்ளாளர், குக வெள்ளாளர், மூன்று மண்டல 84 ஊர் சோழிய வெள்ளாளர், ஊற்று வளநாட்டு வேளாளர், ஒபிஎஸ் வெள்ளாளர், பய்யூர் கோட்ட வேளாளர், கத்திகாரர் (கன்னியாகுமரி மாவட்டம்), பொடிகார வேளாளர், பூலுவ கவுண்டர், ரெட்டி (கஞ்சம் ) ஷேக், சுந்தரம் செட்டி, சையத், உக்கிரகுல சத்திரிய நாயக்கர், உரிக்கார நயக்கர், வேளார் ஆகிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதிகளும்; சீர் மரபினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளில் சேர்வை (திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்) என்னும் சாதியும் ஒன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம் பெறவில்லை.

இதனால் ஒன்றிய அரசு நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் போது அவர்கள் பொதுப் பட்டியலிலேயே வைத்து கருதப்படுகின்றனர். அதனால் அவர்கள் தமது இடஒதுக்கீட்டு உரிமையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பட்டியலில் உள்ள சாதிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த 26 சாதிகளின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கும்படி இந்த செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

4. இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் “சாதிவாரிக் கணக்கெடுப்பு” நடத்தவேண்டும் எனக் கோரி வருகின்றன. 2011-ல் இந்தியா முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு (Socio Economic Caste Census – SECC) எடுக்கப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பில் மற்ற விவரங்களை வெளியிட்டுவிட்டு சாதிவாரி மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களை மட்டும் இந்திய ஒன்றிய அரசு வெளியிடாமல் வைத்துள்ளது.

2021 செப்டம்பர் 1 ஆம் தேதி, சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய அரசு காலந்தாழ்த்தாமல் சாதிவாரி கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.