உங்களுக்குக் கோடை விடுமுறை தொடங்கியிருக்கும். இல்லையென்றால் இன்னும் சில வாரங்களில் தொடங்கிவிடும். கோடை விடுமுறையில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? புதிதாக ஏதாவது ஒரு பொழுதுபோக்கையோ அறிவியல் செயல்பாட்டையோ கற்றுக்கொள்ளலாமே! உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள தாவரங்கள், பூங்கா, நீர்நிலை என இயற்கை செழிப்பாக உள்ள ஏதாவது ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அந்த இடத்தில் சூரிய உதயத்திலிருந்து காலை 9-10 மணி வரை பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் போன்றவற்றை கவனிக்கத் தொடங்குங்களேன். பார்க்கும் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி ஒரு சிறிய நோட்டில் எழுதி வையுங்கள். அவற்றை வரைந்து வண்ணம் தீட்டுங்கள். இது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு.

சில நாட்களில் அவற்றை வேறுபடுத்தி அறிய நீங்கள் பழகிக்கொள்ளலாம். அவற்றைப் பற்றிக் கூடுதலாக அறியவும் அவற்றின் படங்களைக் கொண்டு அடையாளம் காணவும் ‘இந்தியப் பொதுப் பறவைகள்’ குறித்த படஅட்டைகள் உங்களுக்கு உதவும்.
பெங்களூருவைச் சேர்ந்த நேச்சர் கன்சர்வேஷன் பவுண்டேஷனின் ஏர்லி பேர்ட் என்கிற துணை நிறுவனம் இந்தப் படஅட்டைகளை வெளியிட்டுள்ளது. 40 பறவைகள் குறித்த வண்ணப் படங்கள், அவை பரவியுள்ள பகுதி, வாழும் இடம், உணவு, அளவு, ஆண்-பெண் வேறுபாடு உள்ளிட்டவை குறித்த அடிப்படைத் தகவல்கள் இந்தத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தத் தொகுப்பைக் கொண்டு குழந்தைகளுக்குப் பறவைகளைக் குறித்துக் கற்றுத் தரலாம். அத்துடன் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குழுவாகச் சேர்ந்து இந்த அட்டைகளில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில் தகவல் விளையாட்டை விளையாடலாம். நினைவாற்றலைச் சோதிக்கும் வகையில் நினைவாற்றல் விளையாட்டையும் விளையாடிப் பார்க்கலாம். இயற்கை, பறவைகள் குறித்துப் பெற்றோர், ஆசிரியர், சிறார் செயல்பாட்டாளர்கள் கற்பிக்கவும் இந்த அட்டைகள் பெருமளவு உதவியாக இருக்கும்.