செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் சாதிய ஆணவம் தலைவிரித்து ஆடுவது மிகுந்த வேதனையை அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சிங்கப்பெருமாள் கோவிலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல்தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் கூறியதாவது: நாங்குநேரியில் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிக் கொண்டு இருக்கிறது. பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் மிக மோசமாக வேர் ஊன்றி இருக்கிறது என்பதை பார்க்கும் போது மிகவும் கவலை அளிக்கிறது. தமிழ்நாட்டில் சாதிய ஆணவம் தலைவிரித்து ஆடுவது வேதனை அளிக்கிறது. தமிழ்நாடு சாதிய ஆதிக்க மனோபாவம் கொண்ட மாநிலமாக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுபோன்ற சாதிய ஆணவமனோபாவங்களுடன் செயல்படுகின்ற யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்பாதி கோயில் பிரச்சினை மற்றும் வேங்கை வயல் மலம்கலந்த பிரச்சினை ஆகியவற்றுக்கு உடனடி தீர்வு கிடைக்காததால், இதுபோன்று செயல்படுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது. எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு செய்வது தவறு. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தாக வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் அரசியல் மயமாகிவிட்டது. இரு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருப்பதால் மோதல் வரட்டும் என்றே காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இது தமிழகத்தை வஞ்சிக்கக்கூடிய செயல். ஆளுநர் ரவி மனதில் பட்டதை எல்லாம் அரசியல்வாதி போல பேசி வருகிறார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் அசைவ உணவகங்கள் இருந்தால் அவருக்கு என்ன பிரச்சினை. இவ்வாறு கூறினார்.