துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பட்ட செம்மொழி, கீழடி, தமிழ்நாடு பற்றிய காட்சிப் படங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், “இந்திய வரலாற்றை தெற்கிலிருந்து எழுதுவோம்” என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு வார விழாவையொட்டி, துபாயில் உள்ள 2217 அடி உயரம் கொண்ட உலகிலேயே அதிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வுகளின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி, இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “3,200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி மற்றும் பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா-வில் ஒளிபரப்பப்பட்டது. குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்!” என்று பெருமிததுடன் கூறியுள்ளார்.