திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், தனக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம்ஆகியோர் மூலமாக அபகரித்ததாக, தற்போதைய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாமோதரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், தன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி பேரவைத் தலைவர் அப்பாவு தரப்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது, அப்பாவுக்கு எதிரான இந்த வழக்கு தவறான தகவல்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் தாமோதரன் தரப்பில் தொடரப்பட்டிருந்த 2 வழக்கு களையும் முடித்துவைத்து உத்தரவிட்டார்.