தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுக்களை ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அலுவலகத்தில் மே 31ம் தேதி வரை தாக்கல் செய்லாம் என அறிவிக்கப்பட்டது.

காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும், வேட்பு மனு பரிசீலனை ஜூன் 1, வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்​ கொள்வதற்கான கடைசி நாளாக ஜூன் 3 ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணியுடன் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

 

 

மாநிலங்களவை திமுக வேட்பாளர்களான கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமார் ஆகியோர் மே 27 ம் தேதியும், அதிமுக வேட்பாளர்கள் சி வி சண்முகம், தர்மர், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் ஆகியோர் மே 30 ம் தேதியும் மனு தாக்கல் செய்தனர்.

சுயேட்சையாக பத்மராஜன், அக்னி ஶ்ரீராமச்சந்திரன், மன்மதன், கந்தசாமி, சுந்தரமூர்த்தி, தேவராஜன், வேல்முருகன் சோழகனார் ஆகிய 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ப.சிதம்பரம் 3 மனுக்களும், திமுக வேட்பாளர்கள் கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் தலா 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 13 வேட்பாளர்கள் சார்பாக 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.