நீட் தேர்வு தொடர்பாக ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை எடுத்துரைத்து, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்டமுன்வடிவை தமிழக சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, ஆளுநர் அச்சட்டமுன்வடிவினைத் திருப்பி அனுப்பி வைத்துள்ள நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (5-2-2022) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் சார்பில், திமுக சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, இந்திய தேசிய காங்கிரஸ் கு. செல்வப்பெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் வீ.பி. நாகைமாலி, மதிமுக சார்பில் ஏ.ஆர். ரகுராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எம். சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் E.R. ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி. வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலில், கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்று, தொடக்க உரை ஆற்றினார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , நீட் தேர்வு விலக்கு தொடர்பான வரைவுத் தீர்மானத்தினை முன்மொழிந்தார். இதையடுத்து, கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்தார்கள். பின்னர், தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் கீழ்க்காணும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்: மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்களை மிகவும் பாதித்துள்ளதோடு, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிப்பதாகவும் அமைந்துள்ளது. சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குத் தொடர்ந்து செல்லும் வசதி வாய்ப்புகள் பெற்றவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ள இந்தத் தேர்வு முறை, பள்ளிக் கல்வியின் அவசியத்தையே சீர்குலைக்கின்றது.

இவற்றைக் கருத்தில்கொண்டு, இந்தத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12-வது வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தமிழக மக்களிடையே நிலவி வரும் அசைக்கமுடியாத கருத்தொற்றுமையை மனதில் கொண்டு, மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக, நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விலக்கு அளிக்கும் சட்டமுன்வடிவை 13-9-2021 அன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.

இந்தச் சட்டமுன்வடிவை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், முதல்வர், ஆளுநரை நேரில் சந்தித்து, இந்தச் சட்டமுன்வடிவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இதுகுறித்து மனு அளித்தும், மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள். தமிழகத்திலுள்ள மாணவர்களின் மருத்துவக் கனவினை நனவாக்கிடவும், எதிர்கால நலனைப் பாதுகாத்திடவும், இது போன்ற பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தோம்.

இருப்பினும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில், சட்டமன்றத்தில் மக்கள் நலன் கருதி நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமுன்வடிவினை மத்திய அரசுக்கு அனுப்பாமல் ஐந்து மாத காலம் வைத்திருந்து, பின்னர் அந்தச் சட்டமுன்வடிவை தமிழக சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, ஆளுநர் 1-2-2022 அன்று பேரவைத் தலைவர் அவர்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவு ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனுக்கு எதிரானது, இச்சட்டத்திற்கு அடிப்படையான நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு தெரிவித்துள்ள கூற்றுகள் தவறானவை என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளது சரியல்ல என நடுநிலையாளர்களும், சட்ட வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு தேவையற்றது என்ற ஆளுநரின் கருத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும், மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்கவும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தீர்வாக அமையும் என்ற அடிப்படையில், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வு குறித்து ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை எடுத்துரைத்து, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என இந்தச் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.