புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சக வீரரின் தங்கை திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சைலேந்திர பிரதாப் சிங் கடந்த 2008-ம் ஆண்டு சிஆர்பிஎப்-ல் சேர்ந்தார். இவர், காஷ்மீரின் சோபூரில் செயல்பட்டு வரும் 110-வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சைலேந்திர சிங் வீரமரணம் அடைந்தார்.

இந்நிலையில், சைலேந்திர பிரதாப் சிங்கின் தங்கை ஜோதியின் திருமணம் ரேபரேலி அருகேஉள்ள அவரது சொந்த ஊரில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சீருடை அணிந்த 10-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் தீடீரென அங்கு சென்றனர். இதைப்பார்த்த திருமண வீட்டார் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஜோதியின் திருமணத்தில் சகோதரர்கள் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் சிஆர்பிஎப் வீரர்கள்செய்தனர்.

அத்துடன் மணமக்களுக்கு ஆசியுடன் பரிசுகளையும் வழங்கினர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சிஆர்பிஎப் அதிகாரிகள், “சைலேந்திர பிரதாப்சிங்கின் சகோதரி ஜோதி திருமணவிழாவில், அவரது மூத்த சகோதரர்கள் போல வீரர்கள் பங்கேற்றனர்” என பதிவிடப்பட்டுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சிஆர்பிஎப் வீரர்களின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.