கடலூர்: மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, சிதம்பரம் அருகே கிள்ளையில் இருளர் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து, சிதம்பரம் அருகே கிள்ளையில் இருளர் பழங்குயின மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான கிள்ளை ரவிந்திரன் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மணிப்பூர் அரசுகளை கண்டித்தும் பேசினார். இதில் 300-க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின சமூக மக்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

முன்னதாக, கிள்ளை கடைத் தெரு பகுதியிலிருந்து அஞ்சல் அலுவலகம் வரை அனைவரும் பேரணியாக சென்று அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய அரசை கண்டிக்கும் வகையில் கிள்ளை பகுதியில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் ஒரு நாள் வேலைக்கு செல்லாமல் அவர்கள் வசிக்கும் வீடு மற்றும் அங்குள்ள பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்: மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம், சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.