கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சித் தலைவர் பதவியைப் பட்டியல் பிரிவுக்கு ஒதுக்கக் கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கரூர் புஞ்சை புகழூரைச் சேர்ந்த திருமலை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

”புகழூர் நகராட்சி வாக்காளர்களில் 40 சதவீதம் பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். 1996-ம் ஆண்டிலிருந்து புகழூர் நகராட்சித் தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி அனைத்து சமூகத்தினரும் தலைவராகும் வகையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

இதனால் வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் புகழூர் நகராட்சித் தலைவர் பதவியைப் பட்டியல் பிரிவுக்கு ஒதுக்கக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, புகழூர் நகராட்சித் தலைவர் பதவியைப் பட்டியல் பிரிவுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்”.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.