இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் செய்ய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி 8-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அடைக்கப்பன் போட்டியின்றி தேர்வான நிலையில், 14 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 12 இடங்களிலும், 1வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி க.கலாராணி, 4வது வார்டில் பாஜக ப.விஜயகுமார் ஆகியோர் வெற்றிப்பெற்றனர். புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் திமுகவினர் அதிருப்தியடைந்தனர்.

புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (மார்ச் 4ம் தேதி) தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி தலைவர் பதவி வேட்பாளர் க.கலாராணி வந்திருந்த நிலையில், திமுகவினர் அவரது பெயரை முன்மொழியாமல் திமுகவைச் சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராக திமுகவினர் முன்மொழிந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி தலைவர் வேட்பாளரான க.கலாராணி உள்ளிட்ட வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாததால் புவனேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், ஏமாற்றமடைந்த கலாராணி அவர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் செய்ய முயன்றனர். டிஎஸ்பி தேவராஜன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர். மேலும், தேர்தல் முறையாக நடைபெறவில்லை. நல்ல முடிவு வழங்கப்படவேண்டும் என கலாராணி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here