ஈசிஆர் ரிசார்ட்டில் போதை விருந்து நடந்ததாக எழுந்த புகாரில் 50 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இசை நிகழ்ச்சி மற்றும் போதை விருந்து நடந்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி உத்தரவின் பேரில் மது விலக்கு போலீஸார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் அங்குச் சோதனை செய்ததில் போதை பொருட்கள், வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த போதை விருந்தில் 50 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியது தெரிய வந்துள்ளது. அவர்களின் பெயர், முகவரிகளைச் சேகரித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த ரிசார்ட் வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன்மவுலானாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆணையர் ரவி கூறும்போது, “பனையூர் ரிசார்ட்டில் போதைப் பொருட்கள் ஏதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை; சில மது பாட்டில்கள் மட்டுமே இருந்தன. மது விருந்து நடைபெற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.