ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் மருந்துக் கடை உரிமையாளர், சாலையோர வியாபாரி, டாக்ஸி ஓட்டுநர் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் உட்பட 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் நான்கைந்து தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியதாக உளவுத் துறை தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் அந்தத் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று அதிகாலை அங்கு விரைந்தனர்.

அப்போது, அங்கு மறைந் திருந்த தீவிரவாதிகள் சரமாரி யாகத் துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கினர். பதிலுக்கு ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்பு மோதலில் ‘ஜூனியர் கமிஷண்ட் ஆபிசர்’ (ஜேசிஓ) மற்றும் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கிடையில், அருகில் உள்ள அடர்ந்த சாம்ரெர் காட்டுப் பகுதிக்குள் தீவிரவாதிகளுடன் தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்தது.

அவர்கள் எந்தப் பக்கமும் தப்பிச் செல்ல முடியாத வகையில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெறுகிறது என்று அதிகாரி கள் நேற்று தெரிவித்தனர்.- பிடிஐ