தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து அதிகரித்ததால் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாறு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து தொடர் மழை மற்றும் கிருஷ்ணகிரி அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை கிராமத்தில் தென்பெண்ணை யாற்றில் உள்ள சென்னியம்மன் கோயில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
சாத்தனூர் அணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 4,270 கனஅடிக்கு தண்ணீர் வந்துள்ளது. அப்போது, அணையின் நீர்மட்டம் 112.95 அடியாக இருந்தது. அதன்பிறகு, நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முற்பகலில், விநாடிக்கு 11,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 6 மணியளவில் விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
இதனால், 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114.70 அடியை எட்டியது. 12 மணி நேரத்தில் 2 அடி உயர்ந்தது. நீர்வரத்து தொடரும் என்பதால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் 6,100 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 30 மி.மீ., மழை பெய்துள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள தால் திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணையாறு கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றை கடக்கவும், குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் என பொதுப்பணித் துறை எச்சரித்துள்ளது.
குப்பநத்தம் அணை
திருவண்ணாமலை மாவட்டத்தி லும் மழையின் தாக்கம் உள்ளதால், ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகி தொடங்கும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தொடர்கிறது. 59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 51.66 அடியாக உள்ளது.
அணைக்கு 370 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 521 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 44.8 மி.மீ., மழை பெய்துள்ளது.
மிருகண்டா நதி அணை
22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதியின் நீர்மட்டம் 20.34 அடியை எட்டி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 31 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 72 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 42.2 மி.மீ., மழை பெய்துள்ளது.
செண்பகத்தோப்பு அணை
62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையில் நீர்மட்டம் 51.69 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 94 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 186 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 4.6 மி.மீ., மழை பெய்துள்ளது.