கோடையை சமாளிக்க வனத்துறையிலுள்ள விலங்குகளுக்கு பழக் கூட்டு மன்றும் மலைப்பாம்பு, நட்சத்திர ஆமைகளுக்கு குளிர்ந்த நீர்தெளிக்க புதுச்சேரி வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கோடையில் வெப்பம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து மனிதர்கள் தவிக்கும் சூழலில் புதுச்சேரி வனத்துறை அலுவலகத்திலுள்ள விலங்குகள் தற்காத்துக் கொள்ளவும் நல்ல உடல் நிலையில் இருக்கவும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க தரப்படும் பழ, காய்கறி கூட்டை ருசித்து உண்கின்றன. மலைப்பாம்பு, நட்சத்திர ஆமைகளுக்கு குளிர்ந்த நீர் தெளிக்கப்படுகின்றன.
புதுச்சேரி-கடலூர் சாலையில் வனத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு மான், குரங்கு, மயில், கிளி, மலை பாம்பு உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. முக்கியமாக புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் அடிப்படும் பறவைகள், விலங்குகளும் இங்கு பாதுகாக்கப்படுகிறது. இது கோடை காலம் என்பதால் விலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பாக துணை வனப்பாதுகாவலர் வஞ்சுளவள்ளி கூறுகையில், “கத்தரி வெயில் தொடங்கியுள்ளதால், தொடர்ந்து ஒரு மாத காலத்துக்கு இங்குள்ள வன விலங்குகளுக்கு குளிர்ந்த சூழல் உருவாக்க திட்டமிட்டோம். மலைப்பாம்புகள், நட்சத்திர ஆமைகள் மீது குளிர்ந்த நீரை தெளிக்கிறோம். மான்கள் போன்ற விலங்குகள் இருக்கும் பகுதியை பசுமையான சூழலாக்கி தினசரி காலை, மாலையில் குளிர்ந்த தண்ணீர் தெளிப்பதுடன், தர்பூசணி, கிர்ணி பழம், வெள்ளரி, உருளை, கேரட், பீட்ரூட், என பழம், காய்கறிகள், கீரைகள் தரப்படுகிறது. ஒரு மாத காலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
பொது மக்களும் தினசரி வீட்டின் மாடிப்பகுதியில் தினசரி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம். பறவைகள் குடிநீர் அருந்த வசதியாக இருக்கும். நிழல் தரும் வகையில் சிறிய வலைகளை அமைக்கலாம், குடிநீருடன் தானியங்கள், பழங்கள், தர்பூசணி போன்றவற்றை பறவைகளுக்காக வைக்கலாம். கோடையில் குளிர்ந்த இடங்களை நோக்கி பாம்பு வரவாய்ப்புண்டு. பாம்பை கண்டால் வனத்துறைக்கு தகவல் தரலாம்” என்று குறிப்பிட்டார்.