பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்கு விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்ஐசி நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை செல்லூர் எல்ஐசி மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு மணி நேரம் வெளிநடப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாபத்தில் இயங்கும் எல்ஐசி நிறுவனத்தின் 3.5% பங்குகளை விற்பது எல்ஐசி-யை தனியாருக்கு தாரை வார்க்கும் முன்னோட்டம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் எல்ஐசி ஊழியர்கள் இரண்டு மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நாகர்கோயில், தக்கலை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் செயல்படும் எல்ஐசி அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. எல்ஐசியை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், திருச்சி ரயில்நிலையம் அருகில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசியின் பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் 2 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை அலுவலகத்திற்கு முன்பு திரண்ட ஊழியர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.