கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக 12 கத்தோலிக்க வேட்பாளர்களை பாஜக களமிறக்கி உள்ளது.
கோவா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 தொகுதி களுக்கு, பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் கோவாவில் முதல் முறையாக 12 கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேர் தலில், 6 கத்தோலிக்கர்கள் பாஜக சார்பில் போட்டியிட்டு அனைவரும் வெற்றி பெற்றனர். அதன்பிறகு கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் 7 கத்தோலிக்கர்கள் போட்டியிட்டனர். அனைவருமே வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்கள்.
கோவாவில் பாஜக.வுக்கு 3.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 18 சதவீதம் பேர் கத்தோலிக்கர்கள். இந்துக்கள் 66 சதவீதம். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் சதானந்த் ஷெத் தனவடே கூறும்போது, ‘‘பாஜக மதவாதக் கட்சி அல்ல. இந்த சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் பாஜக.வின் கொள்கை. அதன்படி, 12 கத்தோலிக்கர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார். எனினும் முஸ்லிம் வேட்பாளர்கள் யாரையும் பாஜக நிறுத்தவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு 10 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பாஜக.வில் சேர்ந்தார். அதன்பிறகு பாஜக.வில் கத்தோலிக்க எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், 5 கத்தோலிக்க எம்எல்ஏ.க்கள் பாஜக.வில் இருந்து விலகி வேறு வேறு கட்சிகளில் சேர்ந்துள்ளனர் .
அரசியல் நிபுணர் கிளியோபடோ அல்மீடா கூறும்போது, ‘‘மதத் தின் அடிப்படையில் பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் 12 கத்தோலிக்கர் களை வேட்பாளர்களாக தேர்ந் தெடுத்துள்ளது. தொண்டர்கள் பலம் நிறைந்த கட்சிதான் பாஜக. பொதுவாக கட்சியின் முடிவை பாஜக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்’’ என்று தெரிவித்தார்.