குரூப் போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அட்டவணையை அதன் தலைவர் பாலச்சந்திரன் இன்று வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பாலச்சந்திரன் கூறியதாவது:
“கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு குரூப்-2, 2A மற்றும் குரூப்-4 தேர்வுகள் 2022-ம் ஆண்டில் நடைபெறவுள்ளன. மொத்தம் 11,086 காலிப்பணி இடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவுள்ளன.
பிப்ரவரி மாதத்தில் குரூப்-2, 2A தேர்வுகளும், மார்ச் மாதத்தில் குரூப்-4 தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியாகும். அறிவிப்பாணை வெளியான 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதைத் தடுப்பதற்காகத் தேர்வு அறைகளில் இருந்து விடைத்தாள்களைக் கொண்டுவரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் கண்காணிக்கப்படும்.
மேலும் ஓஎம்ஆர் தாள் தேர்வுகளில் இடம் பெற்றுள்ள தனிப்பட்ட விவரங்களைக் கொண்டு விடைத்தாள் திருத்தும் முறையில் கடந்த காலங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதனைத் தடுக்கும் வகையில் ஓஎம்ஆர் தாளில் இடம் பெற்று இருக்கும் தேர்வாளரின் தனிப்பட்ட விவரங்கள் தேர்வு முடிந்த பிறகு பிரித்து எடுப்பதுடன், தேர்வு எழுதுபவர்களுக்கு வழங்கப்படும் ஓஎம்ஆர் தாள் எண் பதிவு செய்து திருத்தப்படும்.”
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.