நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரவு உணவை சாப்பிடுவதில்லை” என பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் தனது வழக்கமான உணவு பழக்கங்கள் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
‘கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸேபூர்’, ‘ஃபேமிலி மேன்’ மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய். அவர் நடித்துள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ (Sirf Ek Bandaa Kaafi Hai) திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் மே23-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் தனது வழக்கமான உணவு பழக்க வழங்கங்கள் குறித்து பேசிய நடிகர் மனோஜ் பாஜ்பாய், “நான் இரவு உணவை சாப்பிட்டு 13-14 வருடங்கள் ஆகிவிட்டது என நினைக்கிறேன். என்னுடைய தாத்தா நல்ல உடல் வலுவுடன் ஃபிட்டாக இருப்பார். அவரைப்பார்த்து நாமும் அப்படியாக வேண்டும் என நினைத்தேன். அதற்காக அவர் என்ன சாப்பிடுகிறார், எப்படி சாப்பிடுகிறார் என்பதை பின்தொடர்ந்தேன். அவரின் உணவுப்பழக்கங்களை நான் பின்தொடரத் தொடங்கியதும் உடல் எடை குறைந்து புத்துணர்ச்சியாக உணர்ந்தேன்.
அப்போது இந்த உணவுப்பழக்க வழக்கத்தை தீவிரமாக கடைபிடிக்க ஆரம்பித்தேன். அப்போதிலிருந்து நான் 12 முதல் 14 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இரவு உணவையும் தவிர்த்தேன். மதிய உணவுக்குப் பிறகு எங்கள் வீட்டின் சமையலறை செயல்படாது. எங்கள் மகள் ஹாஸ்டலில் இருந்து திரும்பி வந்தால் மட்டுமே செயல்படும். ஆனால் இரவு உணவை சாப்பிடாமல் இருந்தது எனக்கு ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. பசியைப்போக்க அதிக அளவில் தண்ணீர் குடிப்பேன். ஆரோக்கியமான பிஸ்கெட்களை உண்டு பசியை போக்கிக்கொள்வேன். இந்த லைஃப் ஸ்டைல் எனக்கு நல்ல பலனைக் கொடுத்தது. நீரிழிவு நோய், இதயம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த முறையை பெரும் உதவியாக இருந்ததது” என்றார்.