கரோனா நிவாரண நிதியில் இருந்து கடந்த ஆண்டு கிருமிநாசினி, முகக்கவசம், கையுறைகள் வாங்கியதில் ரூ.11.55 லட்சத்துக்கு ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான சிவஞானவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘2020-ம் ஆண்டு ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், கரோனா நிவாரண நிதியில் இருந்து கிருமிநாசினி, கையுறைகள் மற்றும் முகக்கவசம் போன்றவை அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. லிட்டருக்கு ரூ.76.50-க்கு விற்கப்பட்ட கிருமிநாசினி ரூ.280 ரூபாய் வீதம் 5 ஆயிரம் லிட்டர் வாங்கப்பட்டுள்ளது.

ரூ.130-க்கு விற்கப்பட்ட முகக்கவச பண்டல்கள் ரூ.220-க்கும்ரூ.13-க்கு விற்கப்பட்ட கையுறைகள் ரூ.180-க்கும் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்து 200 அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘மனுதாரர் ரூ.25 ஆயிரத்தை டெபாசிட் செய்யும்பட்சத்தில் இந்தபுகார் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை செயலர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் டெபாசிட் தொகையை மனுதாரருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.