கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கிய நிலையில், மறுதேர்தல் நடத்துவதை எதிர்த்து திமுக போட்டி வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள சூளேஸ்வரனட்டி பேரூராட்சி உறுப்பினராக தேர்வாகியுள்ள திமுகவைச் சேர்ந்த ஜெ.வனிதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ’பேரூராட்சி தலைவர் வேட்பாளராக ஆ.ராகினி என்பவர் கட்சியால் அறிவிக்கப்பட்டதால், நான் போட்டி வேட்பாளராக தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன்.

மார்ச் 4-ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் ராகினி 7 வாக்குகள் மட்டுமே பெற்றதால், 8 வாக்குகள் பெற்ற என்னை பேரூராட்சி தலைவராக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், அதிருப்தியடைந்த ராகினியின் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைவர் தேர்வில் தவறுகள் இருப்பதாக கூறி, எனக்கு வழங்கப்பட்ட சான்றிதழை, தேர்தல் அலுவலர் திரும்ப பெற்றார்.

எனவே தவறுகளை சரிசெய்து மீண்டும் சான்றிதழை என்னிடம் வழங்காமல், மீண்டும் தேர்தல் நடத்தபட்டு வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் அலுவலர் அறிவித்தது சட்டவிரோதமனது. எனவே சூளேஸ்வரன்ட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் நான் வெற்றி பெற்றதாக அறிவித்து, சான்றிதழை வழங்க தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்’ கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கிய நிலையில், மீண்டும் தேர்தல் நடத்த முடியாது என வாதிடப்பட்டது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுதாரரின் வெற்றி சான்றிதழில் உள்ள கையெழுத்து தேர்தல் அலுவலரின் கையெழுத்து அல்ல. மேலும், சான்றிதழில் பிப்ரவரி 22 என தேதியென குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக பதிலளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.