தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். ஊழலை ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம்  சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா அமைப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

முதல்வர், சட்டமன்றப் பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் மற்றும் சட்டத்துறையை சார்ந்த உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோரை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார். தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  

அரசின் பொறுப்புடைமையும், சார்பற்ற நிலையினையும் நிலைநாட்டும் பொருட்டு, பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் இந்த லோக்  ஆயுக்தா அமைப்பின் வரம்பிற்குள், மாநில முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (முன்னாள் உறுப்பினர்கள் உட்பட), அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அமைப்பு, வாரியம், சங்கம், நிறுவனம்  தன்னாட்சி  அமைப்பு போன்றவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

குற்ற நிகழ்வு நடைபெற்ற நான்கு ஆண்டுகளுக்குள் பெறப்படும் புகார் மனுக்களை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். இதில் பெறப்படும் புகார்  மனுவின் தன்மையையும் குற்றம் சுமத்தப்பட்டப் பொது ஊழியரின் நிலையினையும் பொறுத்து, அந்த புகாரை விசாரிக்க, தனது விசாரணை பிரிவையோ அல்லது மாநிலத்தின் வேறு ஏதாவதொரு விசாரணை அமைப்பினையோ அல்லது விழிப்புப்பணி ஆணையத்தையோ கோருவதற்கு லோக் ஆயுக்தா அமைப்பிற்கு முழு அதிகாரம் உண்டு.

இந்த நிலையில், லோக் ஆயுக்தா கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.