கடந்த 2016 டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன் நான் உட்பட 3 அமைச்சர்கள் அவரை நேரில் பார்த்தோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 22) ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்து வருகிறார்.

விசாரணையில் அவர், “2016 டிசம்பர் 5-ம் தேதி இறப்பதற்கு முன்பாக ஜெயலலிதாவை நான் உட்ப அமைச்சர்கள் 3 பேர் அவரை நேரில் பார்த்தோம். உயிர்காக்கும் கருவியாக இருக்கக்கூடிய எக்மோ கருவியை ஜெயலலிதாவின் உடலில் இருந்து அகற்றுவதற்கு முன் அவரை நேரில் பார்த்தேன்.

அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 4-ம் தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தபோது, ஜெயலலிதாவை சந்திக்காமல், பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் நினைவில்லை. அன்றைய தினம் ஜெயலலிதா இதய துடிப்பு செயலிழந்த நிலையில், மீண்டும் இதயத்துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை அளித்தது குறித்து எனக்கு தெரியாது.

ஆனால் அன்று மாலை எக்மோ கருவி பொருத்தப்பட்டது குறித்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் கூறினார். அவர் இறப்பதற்கு முன்பாக மூத்த அமைச்சர்கள் 3 பேருடன் நான் அவரை நேரில் பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.

அப்போலோ நிர்வாகம் எதிர்ப்பு: மருத்துவ ரீதியாக ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது குறித்து தனக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்றும் அவரிடம் மருத்துவக் குறிப்புகள் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்றே மருத்துவ சிகிச்சை தொடர்பாக அவர் எதுவும் தெரியாது எனக்கூறிவிட்டதால், மீண்டும் அதுதொடர்பான கேள்விகளைக் கேட்க வேண்டாம் எனக் கூறினர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படவில்லை.

கைரேகை பெற்றது தெரியும்! முன்னதாக, இடைத் தேர்தலையொட்டி அந்த படிவங்களில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தெரியுமா எனக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நலம் குறித்து சசிகலா என்னிடம் ஓரிரு முறை ஜெயலலிதா நன்றாக இருப்பதாக கூறினார். இந்த தகவல் குறித்து நான் சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில் இதுதொடர்பாக நான் பேசவில்லை.

அரசாங்கப் பணி தொடர்பாகஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவொரு தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்று கூறியிருந்தார்.