இந்தியாவிலே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 1,945 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 15,409 பேர் தற்போது கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றில் 80 முதல் 90 சதவீத பேர் வீடுகளில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகக் குறைவான நபர்கள்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வகைகளான பி.ஏ. 4 மற்றும் பி.ஏ. 5 காரணமாக அதிக அளவு கரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாத தொடகத்தில் பி.ஏ. 4 மற்றும் பி.ஏ. 5 வகை தொற்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவிலே தமிழகத்தில்தான் அதிக அளவு உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை 17-ம் தேதி வரை 68 பேருக்கு பி.ஏ. 4 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 18 பேருக்கும், தெலங்கானாவில் 20 பேருக்கும் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜூலை 17-ம் தேதி வரை 331 பி.ஏ. 5 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 150 பி.ஏ. 5 வகை தொற்றுகள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.