மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
செஸ் ஒலிம்பியாடின் துவக்க நிகழ்ச்சி கண்கவர் நிகழ்ச்சிகளுடன், பாரம்பரிய நடனங்களுடன் தொடங்கியது. பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருடன், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, கார்த்தி, உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செஸ் துவக்க விழாவில் நடிகர் கமல் ஹாசன் குரலில், தமிழர் வரலாறு குறித்த ஆடியோ பின்னணியில் ஒலிக்க, அதற்கேற்றவாறு கலைஞர்கள் பெர்ஃபார்ம் செய்தனர். இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு சதுரங்க கீதம் பாடலையும் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.
தொடக்க விழா பிரம்பாண்டமாக நடைபெற்ற நிலையில், கடந்த ஜூலை 29ஆம் தேதி, நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கும் அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் உதயநிதி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டார். மேலும், செஸ் ஒலிம்பியாடின் தொடக்க விழாவை விட நிறைவு விழா பெரிதாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும் எனவும் பதிவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து, ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நிகழ்வுகளை வெளியிட காட்சி ஊடகம் மற்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. உரிமம் பெறுபவர்களுக்கு ஓராண்டிற்கான ஒளிபரப்பு உரிமமும் வழங்கப்படவுள்ளது.