சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால், இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய 45-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரரான கைல் மேயர்ஸ் தொடக்கத்திலேயே 14 ரன்களுடன் நடையைக்கட்டினார். 5-ஆவது ஓவரில் மனன் ஹோரா போல்டாக, குருணால் பாண்ட்யா கேட்ச் ஆகி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை சிஎஸ்கேவுக்கு தாரை வார்த்தனர். இந்த அதிர்ச்சி ஒருபுறமிருக்க 7வது ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன்களுடன் போல்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றம். கரன் ஷர்மா 9 ரன்களில் பெவிலியன் திரும்பியதும் ஆட்டம் தலைகீழாக திரும்பவிட்டது. 10 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 44 ரன்களுடன் பரிதாபமாக ஆடி வந்தது லக்னோ.

நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதானி மீட்பர்களாக இறக்கி அணியைக்காத்து அடுத்த 7 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் பார்த்துக்கொண்டனர். 18வது ஓவரில் பூரன் 20 ரன்களுடன் அவுட்டானாலும் பதானி நிலைத்து நின்று ஆடினார். கடைசி நேரத்தில் கிருஷ்ணப்பா கவுதம் 1 ரன்களில் ஆட்டமிழக்க 19.2 ஓவரில் மழை குறுக்கிட்டது. அப்போது அந்த அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து நீண்ட நேர காத்திருப்புக்குப்பின் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மேலும் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி தரப்பில் மொயின் அலி, மதீஷா பத்திரானா, மகேஷ் தீக்‌ஷனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.