முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்க, ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வதுபிறந்த நாள் விழா தொடர்பாக, பெருந்தன்மையோடும், வரலாற்றுச் சான்றுகளோடும் எம்ஜிஆருக்கும், கருணாநிதிக்கும் இருந்த கலையுலக நட்பு குறித்துமுதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
இதை அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர். ஆனால், இதைதாங்கிக் கொள்ள முடியாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்பொய்யைப் புனைந்து அறிக்கை யாக வெளியிட்டிருக்கிறார்.
எம்ஜிஆருக்கும் ஸ்டாலினுக் கும் இருந்த உறவு எத்தகையது என்பதை ஜெயக்குமார் அறிந் திருக்க வாய்ப்பில்லை.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக மாநாட்டில், சென்னை யிலிருந்து `அண்ணா சுடர்’ ஏந்தி வந்து, மாநாட்டு மேடையில் கருணாநிதி, திமுக பொருளாளர் எம்ஜிஆர் ஆகியோரிடம் ஒப் படைத்து, அவர்களின் பாராட்டைப் பெற்றவர் ஸ்டாலின்.
கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய மருத நாட்டு இளவரசி, மந்திரிகுமாரி படங் கள் மூலமாகதான் எம்ஜிஆர் சினிமாவில் பிரபலமானார் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், இந்த படங்கள் வெளிவருவதற்கு முன்பே சினிமாவில் எம்ஜிஆர் கோலோச்சினார் என்று பச்சைப் பொய்யைக் கூறுகிறார் ஜெயக்குமார்.
கருணாநிதிக்கும், எம்ஜிஆருக் கும் இருந்த கலையுலக உறவு ‘தண்ணீரும் பாலும் கலந்த உறவு’ போல பிரித்துப் பார்க்க முடியாதது. அதேபோல, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் குறித்து வடிகட்டிய பொய்யை ஜெயக்குமார் கூறியிருக்கிறார். பல்கலை.க்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்டி கருணாநிதி திறந்ததற்கு, அந்தப் பல்கலை.யில் உள்ள திறப்புவிழா கல்வெட்டே சான்றாகும்.
கருணாநிதி அதிமுக போன்று காழ்ப்புணர்ச்சி கொண்டவர் இல்லை. 1989-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், பெருந்தன்மையோடு தனது 40 ஆண்டுகால நண்பரின் பெயரில் பல்கலைக்கழகம் கண்ட பெருமை கொண்டவர்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், உட்கட்சி பிரச்சினையால் அவரை அடக்கம் செய்யப்பட்ட இடம் கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. கருணாநிதி முதல்வரானதும் எம்ஜிஆர் நினைவிடத்தைச் சிறப்பாக அமைத்துக் கொடுத்தார். சென்னை அடையாறில் இயங்கி வந்த திரைப்படக் கல்லூரிக்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்டினார்.
இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிடுவது, அமைச்சராக இருந்த ஜெயக்குமாருக்கு அழகல்ல. எம்ஜிஆருக்காக முதலைக் கண்ணீர் விட்டு, வரலாறு தெரியாத ஜெயக்குமார், முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து அறிக்கை வெளியிட எந்தத் தகுதியும் இல்லாதவர்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது